*

பள்ளிக்கூடத்தில் எத்தனை எத்தனை நண்பர்கள். ஆனால் இப்போது, காலம் கடந்த காலத்தில் அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் வெகு சில பெயர்கள் மட்டுமே நினைவுக்குள் வருகின்றன. பெயர்கள் இல்லாத சில முகங்களும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் ஆரம்ப வகுப்புகளில் நினைவுக்கு வந்த அளவு கூட உயர் பள்ளி நாட்களில் பெயர்கள் நினைவுக்கு வரவில்லையே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது. அப்படிகொஞ்சம் நினைவுக்கு வரும் சில நண்பர்களின் தொகுப்பு தான் இது.

ஆறாம் பார்மில் எனக்கு அடுத்ததாக பெஞ்சில் அமர்ந்திருந்தவனின் முதல் பெயர் நினைவுக்கு வரவில்லை. இரண்டாவது பெயர் பார்க்கர். சிகப்பா,உயரமா, ஒல்லியா இருப்பான். பய .. செம காட்டான். என் கூட அடிக்கடி சண்டை போடுவான். பக்கத்தில் வேறு இருப்பானா … எப்போதும் என்னை நெருக்கி இடித்துக் கொண்டு எனக்கு அடுத்த பக்கம் இருப்பவனோடு என்னை மோத விடுவான். ஆனால் என்னை அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். நான் இடம் மாறுகிறேன் என்றால் நாலைந்து நாளைக்கு ஒழுங்காக இருப்பான். பிறகு பழைய கதையை ஆரம்பித்து விடுவான். நிறைய ‘கதை’ விடுவான். ஒரு. கதை மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. பல் விளக்க பேஸ்ட் தீர்ந்து போய் விட்டால் நீம் சோப்பில் பிரஷை நனைத்து தேய்த்துக் கொள்வேன் என்பான். உண்மையோ என்னவோ தெரியாது … ஆனால் அவன் பல் நல்ல வெள்ளையாகத் தானிருக்கும்!

எங்கள் வகுப்பில் கடைசி பெஞ்சில் ஒரு பெரிய ‘பையன்’ இருப்பார். அவரது பெயர் அப்துல்லா. எங்கள் தெருப்பக்கம் இருந்து தான் வருவார். ஒரு வேளை வயதும் அவருக்கு அதிகமாக இருக்கலாம். வகுப்பில் வெகு சிலரிடம் மட்டுமே பேசுவார். எங்களுக்கெல்லாம் அவர் தொடர்பில்லாத மனிதர். ஆசிரியர்கள் கூட அவரை அதிகமாகத் திட்ட மாட்டார்கள். ஆனால் பள்ளிக்கூடம் படித்து முடிந்ததும் அவரை நான் அடிக்கடி பார்ப்பேன். தெற்குவாசல் மார்க்கெட்டில் முதல் கடை அவர்களுடையதாக அப்போது இருந்தது. மாம்பழம் விற்பார்கள், இவர் கடையில் இருக்க மாட்டார். எப்போதாவது கடைக்கு வெளியே முதலாளியாக நிற்பார். நான் அந்தப் பக்கம் போனாலும் அவர் என்னைக் கண்டுக்க மாட்டார். நானும் ஒதுங்கிவந்து விடுவேன். தெற்குமாரட்டு மார்க்கெட்டை அவர் டென்டர் எடுத்திருப்பார் போலும். தினமும் ஒர் சின்ன காக்கிப் பை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு தெருவில் இருக்கும் ஒவ்வொரு கடையாக காசு வசூலித்துக் கொண்டிருப்பார். நாங்கள் பள்ளி முடித்து ஓரிரு வருஷங்களில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த போஸ்ட் ஆபிசுக்கு எதிர்த்தாற் போல் ஒரே மாதிரியாக இரண்டு பெரிய வீடுகள் கட்டினார்கள். கட்டியதும் ஒரு நிக்காஹ் … நமது வகுப்புத் தோழருக்குத் தான். உள்ளதே ‘பெரிய’ ஆளாக இருப்பார். திருமணம் ஆனதும் இன்னும் பெரிய ஆளாக மாறி விட்டார். அதன்பின் அவர் என் வகுப்புத் தோழர் என்பதை நான் மறந்தும் விட்டேன்;மறைத்தும் விட்டேன்.

எங்கள் வகுப்பில் ஒரு வட இந்தியப் பையன். பெயர் என்னவோ ஒரு லால். மதுரையில் ஒரு பெரிய ரெடிட்மேட் கடை அவர்களுடையது. இவரை ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் லயன்ஸ் கிளப் ஒன்றிற்கு நான் பேச்சாளனாகப் போயிருந்த போது பார்த்தேன். மீட்டிங் முடிந்து காபி சாப்பிடும்போது அவர் பெயரைச் சரியாகச் சொல்லி நாங்களிருவரும் வகுப்புத் தோழர்கள் என்றேன். அவருக்கு நினைவில்லை. அன்று நான் ஷூ போட்டிருந்தேன். அவர் செருப்பு போட்டிருந்தார். அட … எதற்கு இதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? பள்ளியில் படிக்கும்போது இவன்அடிக்கடி கருப்பு ஷூ போட்டு வகுப்பிற்கு வருவான். எட்டாவது வகுப்பில் என் அப்பாவிடமும் இவன் ஒரு மாணவன். ஒரு முறை என் அப்பாவிடம் எனக்கும் அவனை மாதிரி ஷூ ஒண்ணு வாங்கிக் கொடுங்கள் என்றேன். என் அப்பா, ‘அடச் சீ … போடா … உன் அப்பன் ஒரு மாசத்தில் சம்பாதிக்கிறதை, அவன் அப்பன் ஒரு மணி நேரத்தில் சம்பாதிக்கிறான். அவன் மாதிரி ஷு கேக்குதா உனக்கு!’ என்றார், அவரை லயன்ஸ் மீட்டிங்கில் பார்த்ததும் இந்த நிகழ்ச்சிதான் என் நினைவுக்கு வந்தது.

அருட்பிரகாசம் அப்டின்னு ஒரு நண்பன். இவனை எனக்குப் பள்ளியில் படிக்கும்போது தெரியாது. அவன் வேறு செக்‌ஷன். பள்ளி முடித்து நான் கல்லூரி போன போது படிக்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு பள்ளி வளாகத்திற்கு வந்து விடுவேன். என்னைப் பார்த்து பரிதாபப் பட்ட ஒரு ஃபாதர் எனக்குப் படிக்க ஒரு அறை கொடுத்தார். அப்போது என்னோடு பள்ளியை முடித்த அருட்பிரகாசம் அரட்டை அடிக்க அந்த அறைக்குவருவான். அவன் அப்போது பள்ளியில் வேலைக்கு சேர்ந்து விட்டான். ஏழ்மை தான் காரணம். அவனுக்குப் படிக்க நிறைய ஆசை. வழியில்லாது போயிற்று., நன்றாகப் பாடுவான். அதிலும் அவன் பாடும் ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற சீர்காழி பாடிய, படத்தில் சுடுகாட்டில் பாடும் அந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். அடிக்கடி அதைப் பாடச் சொல்லிக் கேட்பேன்.அது ஒரு காலம் …!

இன்னொரு நண்பன். செளந்திர ராஜன். அவனும் எட்டாவது வகுப்பில் அப்பாவிடம் ட்யூஷன் படித்தான். எனக்கும் க்ளாஸ் மேட். சாதாரண பையன் தான். ஆனால் அவன் ஒன்பதாவது வகுப்பு போனவுடன் குழந்தையில்லாத அவன் பெரியப்பா அவனை தத்து எடுத்துக் கொண்டார். ஒரு வருஷத்தில் என்ன மாற்றம். தியேட்டர் ஓனர் .. அது இதுன்னு பெரிய ஆளாக ஆகி விட்டான். பின்னாளில் ஒரு கல்லூரியையே ஆரம்பித்து மதுரையின் பெரிய ஆளாகி விட்டார். ஆண்டுப் பிறப்பன்று ஓரிரு ஆண்டுகள் வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்த்து, டைரி,காலண்டர் எல்லாம் கொடுத்துவிட்டுப் போன பழக்கம் இருந்தது. பின்னால் நின்று போனது

மதுரையில் உள்ள ஒரு பெரிய பேக்கரியின் உரிமையாளரின் மகன். என்னைவிட ஓரிரு ஆண்டுகள் மூத்தவர். அவரின் பெயர் … சரி.. அது எதற்கு இங்கு? அவர் எங்கள் வீட்டுக்கு அப்பாவிடம் ட்யூஷன் பயில வருவார். அந்தக் காலத்தில் வரும் சைக்கிள்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மூணே மூணு வகையாக வேண்டுமானால் பிரிக்கலாம். 24 இஞ்ச்; 22 இஞ்ச்; & 18 இஞ்ச். அனேகமாக எல்லா சைக்கிளும் 22 இஞ்ச் தான். சிலர் பெரிய வண்டியாக, உயரமாக 24 இஞ்ச் வைத்திருப்பார்கள். இப்போது அது இல்லாமலே போய் விட்ட்து. இந்த 18 இஞ்ச் சைக்கிள்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப ரேர். பணக்கார வீட்டுப் பசங்க மட்டும் வைத்திருப்பாங்க; அதனால் இந்த சைக்கிளுக்குக் ரொம்ப மதிப்பு.. இந்த அண்ணன் எங்கள் வீட்டுக்கு அந்த சைக்கிளில் தான் வருவார். எனக்கு அப்போ 22 இஞ்ச் சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டு மட்டும் ஓட்டத் தெரியும்.  இந்த சைக்கிள் ஓட்ட செம ஆசை. ஆனால் அந்த அண்ண்னிடம் கேட்டு வாங்கினால் அப்பாவுக்குத் தெரிந்தால் செமையா எனக்கு ஏதாவது கிடைக்கும். ஒரு நாள் அவர் வந்து சைக்கிளை வாசலில் நிப்பாட்டும் போது நான் ஜொள்ளு விட்டு நிற்பதைப் பார்த்து விட்டார். ’சைக்கிள் ஓட்றியா?’ன்னு கேட்டார். வேண்டாம்னு சும்மானாச்சுக்கும் சொன்னேன். ‘இல்லடா … ஓட்டு … அப்பாட்ட சொல்ல்லை’ன்னார். ஆஹா … சைக்கிளை வாங்கி குரங்குப் பெடலிலேயே ஓட்ட ஆரம்பித்தேன். சின்ன சைக்கிளா .. அது கஷ்டமாயிருந்த்து. அப்படியே சும்மா ஜாலியா காலை பார் மேலே போட்டேன். பயமா போச்சு … ஆனா நல்லா ஓட்ட முடிந்தது. அப்டியே சீட்ல ஏறி உட்கார்ந்த்தேன். அட்டே … அன்னைக்குத்தான் முதல் தடவையா சைக்கிளை முழுசா சீட்ல உட்கார்ந்து ஓட்டப் பழகினேன்.

*

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book